Saturday, December 31, 2011

ஈரோடு சங்கமம்-2011 அமைப்பாளர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

ஈரோடு பதிவர் சங்கமம் குறித்து அனேகர் எழுதிவிட்ட பின்னர் எழுத இன்னும் என்ன இருக்கிறது என்று தோன்றினாலும்,15 பதிவரை அழைத்து கெளரவப்படுத்தியவர்களை,விருந்தோம்பலுக்கு உதாரணமாக இருந்தவர்களை,பாசத்தோடு அழைத்தவர்களை பாராட்டி எழுதுவது சகப்பதிவர்களின் கடமை என்ற வகையில் எழுதிகிறேன்.

சென்ற வருடம் வருகிறேன் என்று உறுதியாக சொன்ன பின்பும் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்லமுடியவில்லை.இந்த வருடம் அழைப்பு வந்தவுடன் நிச்சயம் செல்லவேண்டும் என்று  முடிவெடுத்தேன்.பெருவாரியான சென்னை பதிவர்களின் வருகையும்  இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

சென்னையில் பணி,குடும்பம் பெங்களுரில் ஆகவே வாரயிறுதி எப்பவும் பெங்களுர்.16-தேதி வெள்ளியிரவு பணி முடிந்ததும் பெங்களுர் பயணம்.சனிக்கிழமை காலை மகள் பள்ளியில் விளையாட்டு போட்டியை காணச் சென்றேன்.அதிகம் எதிர்ப்பார்த்த என் மகள் கலந்து கொண்ட 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தின் முடிவு வேறு மாதிரியாக வந்தது.

மதியம் சற்று ஒய்வு எடுத்தபின் இரவு ஈரோடு பயணம்.பேருந்தில் ஏறிய உடன் ஜீவ்ஸிடமிருந்து அழைப்பு “எங்க இருக்கிங்க அரவிந்தன்.?” ஜீவ்ஸ் நான் எலெக்ட்ரானிக் சிட்டி தாண்டிட்டேன்” என்றேன்.சரிங்க காலை 4 மணிக்கு ஈரோட்டில் சந்திப்போம்” என்றார் ஜீவ்ஸ்.

மூன்று மணிக்கே ஈரோடு சென்றுவிட்டேன்.4 மணிக்குத்தான் வருவதாய் ஜாபரிடம் சொல்லியிருந்தேன் ஆகவே இப்ப தொந்தரவு செய்யவேண்டாம் என்று பேருந்து நிலையத்தில் காத்திருக்க முடிவு செய்தேன்.அப்பொழுது” 24 மணி நேரம் டீ,காபி,தோடை,இட்லி கிடைக்கும்” என்ற கெளரிசங்கர் உணவு விடுதி கண்ணில் பட்டது.சூடான நெய் தோசை,காபி சாப்பிட்டேன்.இங்கு ஒன்றை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும்.பொதுவாக பேருந்து நிலையத்தில் இருக்கும் உணவு விடுதிகளில் சுத்தம் மற்றும் சுவை பெரிய அளவில் இருக்காது.கெளரி சங்கரில் இரண்டும் போதுமான அளவில் இருந்தது.உணவு பரிமாறியவர் அந்த இரவு நேரத்திலும் சட்டையை பேண்ட்டுக்குள் இன் செய்து பெல்ட்கட்டி நேர்த்தியாக இருந்தார்.

சாப்பிட்டு காலாற நடக்கத் துவங்கினேன்.நேரம் அதிகாலை 3:30 சாலையில் மனித நடமாட்டமோ வாகன ஓட்டமோ ஏதும் இல்லை.

பாதி தூரம் சென்றவுடன் ஜாபரை தொலைப்பேசியில் அழைத்தி விடுதி முகவரியை உறுதிபடுத்திகொண்டேன்.ஜாபர் ”ஏன் பேருந்துநிலையத்தில் இருந்தே கூப்பிட்டிருக்கலாமே ஏன் நடந்து வந்திங்க” என்று கேட்டார்.பரவாயில்லைங்க் காலையில்  நல்ல நடைப்பயிற்சி என்றேன்,


வாசலில் நின்று சிரித்த முகமோடு வரவேற்றார்.2 மணிக்கு படுத்து 3:30 எழுந்துவிட்டிருந்தார் ஜாபர்.அறிமுகங்களுக்குபிறகு வழக்கம்போல அரசியல் பேச ஆரம்பித்தோம்.தமிழ் தேசியம் குறித்து வீவாதங்கள் 4:30 மணி வரை நீண்டது.அப்போது ஜீவ்ஸ் ஈரோடு வந்துவிட்டதாக ஜாபரிடம் தொலைப்பேசியில் தெரிவித்தார்.ஜீவ்ஸை அழைத்து வர ஜாபர் கிளம்ப, நான் சற்று கண்ணயர்ந்தேன். சிறிது நேரத்தில் ஜீவ்ஸ் வந்தார்.பல வருடங்களுக்கு பிறகு ஜீவ்ஸ் பார்க்கிறேன்.வந்தவுடன் கேமாராவை கையில் எடுத்தார்.ஜாபரை பல கோணங்களில் படமெடுத்தார்.ஜாபருக்கு ஆச்சர்யம் ”புகைப்படத்தில் நான் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறேன்” என்று.

ஜாபர் நீங்கள் நேரிலும் மிக அழகாக இருக்கிறீர்கள்!

உடனே ஜாபருக்கு அடுத்த வேலை இணைய இரட்டையர்களான தம்பி லக்கி மற்றும் அதிஷாவை அழைத்து வரும் பணி.

லக்கியும் அதிஷாவும் சிரித்த முகத்துடன் பயண களைப்பு எதுமின்றி அறைக்கு வந்து சேர்ந்தனர்.மீண்டும் அரட்டை கச்சேரி தொடர்ந்தது. ஒரு 7 மணி இருக்கும்.  அப்பொழுது தாடி,ஓங்குதாங்கான உருவத்துடன் எங்கள் ஒருவர் அறைக்கு வந்தார்.கொஞ்சமும் அடையாளம் தெரியவில்லை.அரவிந்த் அண்ணே என்று அழைத்தவுடன் அடையாளம் தெரிந்தது.நம்ம பாசக்கார பாலபாரதி.

நாங்கள் விழாவிற்க்கு செல்ல தயாராகி கொண்டிருந்த நேரத்தில் ஜாபரும் வீட்டிற்கு சென்று தயாராகி வந்தார்.

தாமோதர் அவர்களின் மகிழுந்து எங்களை அழைத்துச்செல்ல காத்திருந்தது.வண்டியில் இடமிருந்த்தும் அதிஷா ஏற மறுத்துவிட்டார்.அதிஷாவுக்கு காரில் செல்ல பயமாம்.காரில் பயணமே செய்ததில்லையாம்.பிறகு ஜாபரின் வண்டியில் வந்தார்.நன்றி ஜாபர்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழகம் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டது என்பது குறித்து விவாதித்துகொண்டே விழா அரங்கை அடைந்தோம்.

வாசலில் விழா அழைப்பாளர்கள் அன்போடும் வாய் நிறைய புன்னைகையோடும் வரவேற்றார்கள்.உடனே சாப்பிடும் இடத்திற்கு சென்றோம்..நான் பட்டு வேட்டி கட்டியிருந்தேன்,தோளில் லாப்டாப் பை.அதைப்பார்த்தவுடன் தவில் இங்க இருக்கு நாதஸ் எங்க இருக்கு மணிஜி என்னை கலாய்க்க ஆரம்பித்தார் :)

சாப்பிட்டு கொண்டிருந்த ஈரோடு கதிர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு”வாங்க அரவிந்தன் எப்படி இருக்கிங்க” என்று அன்போடு விசாரித்தார்.நன்றி கதிர்!


அபி அப்பாவை முதன்முறையாக பார்த்தேன்.மகிழ்ச்சியான அரட்டை தொடர்ந்தது,விரா,மணிஜி,தம்பி கேஆர்பி.ஜாக்கி,லக்கி,அதிஷா,அகநாழிகை வாசு என்று எல்லாம தெரிந்த பதிவர்கள்.

அரங்கம் நிறைந்தது.விழா ஆரம்பித்தது.தகுதியுள்ள 15 பதிவர்கள் அழைத்து கெளரவிக்கப்பட்டனர்.லக்கி ,ஜாக்கி மற்றும் செந்தில் அழைக்கப்பட்டவுடன் எனோ என்னையே அழைத்த மாதிரி ஒரு மகிழ்வான உணர்வு தோன்றியது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் உரை மிக நேர்த்தியாக இருந்தது.நிச்சயம் பல முறை ஒத்திகை  பார்த்திருப்பார்கள்.Its simply flawless!


விழா நடக்கும் நேரத்தில் உடன் இருந்து அன்போடு கவனித்தார் பதிவர் சங்கவி.களையான சிரித்த முகம்.நன்றி சங்கவி!

மதிய உணவு சொன்னால் நம்ம மாட்டீர்கள் சைவ உணவு சாப்பிட காத்திருக்க வேண்டியிருந்தது.ஆருரான் அவர்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் பாசத்துடன் கவனித்தார்.நன்றி ஆருரான்.(உங்களிடம் தமிழ் தேசியம் குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேச வேண்டும்).


சாப்பிட்ட உடன் எல்லோருடன் புகைப்படம் எடுத்துகொண்டேன்.தம்பி கேஆர்பி செந்தில் வாங்கண்ணே அறைக்கு போய் ஒய்வெடுப்போம் என்று அழைத்தார்.எல்லோரிடமும் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

மோகன் குமார்,செந்தில்,ஆருர் முனா செந்தில்,பிலாசபிபிரபாகரன்,மெட்ராஸ் பவன் சிவா மற்றும் செந்திலின் தம்பி ஆகியோருடன்  அறைக்கு வந்து சேர்ந்தேன்,

சின்ன தூக்கம்,டீ அரட்டை என்று மாலைப்பொழுது கழிந்தது. இரவு மீண்டும் சென்னை பயணம்.

விழா அழைப்பாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!






Monday, September 26, 2011

புனித பிலோமினாள் மருத்துவமனையில் பிறந்து ஸ்ரீரங்கபட்டனா காவிரி ஆற்றில் சாம்பலாய் கரைந்து போனான் அஷ்வின்

பெங்களுர் புனித பிலோமினாள் மருத்துவமனையில் பிறந்து ஸ்ரீரங்கபட்டனா காவிரி ஆற்றில் சாம்பலாய் கரைந்து போனான் அஷ்வின்.




என் மனைவியின் தம்பியும் என் சின்ன மாமனாரின் மகனுமாகிய அஷ்வின் என்ற 16 வயது சிறுவன் சென்ற வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்துவிட்டு உடன் படிக்கும் மாணவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உடன் படிக்கும் மாணவன் கௌரவ் உடன், கெளரவ் வண்டியோட்ட (ஹோண்டா டியோ) பின்னால் அமர்ந்து சென்றான் அஷ்வின்.

கோரமங்களா 80 அடிச்சாலையில் (கடவுச்சீட்டு அலுவலகம் எதிரில்) முன்னால் சென்ற வண்டியொன்றை முந்தி செல்ல முயன்ற போது வேகமாக பின்னால் வந்து அரசு பேருந்து இவர்கள் சென்ற வண்டியை இடித்துதள்ளியது..அஷ்வின் பின் தலையில் பேருந்து பலமாக மோதியது.பலமாக அடிப்பட்ட அஷ்வின் கிழே சாலையில் விழுந்தான் வண்டியோட்டிய கெளரவ் மீதும் பேருந்தின் இருச்சக்கரமும் ஏறியது.கெள்ரவ் போட்டிருந்த தலைக்கவசமும் நசுங்கியது.




சம்பவம் நடந்த இடத்திலேயே இரு சிறார்களும் மரணமடைந்தனர்.அஷ்வின் அலைப்பேசி மூலம் அவன் தந்தைக்கு சம்பவம் நடந்த இடத்திலிருந்த பொது மக்கள் தகவல் கொடுத்தனர்.

உரிய மருத்துவ பரிசோதனைக்களுக்குப்பிறது அஷ்வின் உடல் வெள்ளியிரவு 11:15 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.



சனிக்கிழமை மதியம் பசவன்குடி மயானத்தில் மின்சாரம் மூலம் அஷ்வின் உடல் எரியூட்டப்பட்டது.

அவன் படிக்கும் பள்ளியிலிருந்து பெரும்பாலன மாணவ மாணவிகள் ஒற்றை ரோசாப்பூவுடன் அஞ்சலி செலுத்தினர்.


அஷ்வினுக்கும் எனக்குமான உறவு:-

96 வருடம் என் மனைவியை பெண் பார்க்கச்சென்றபோது ஒரு வயது குழ்ந்தையாக இருந்த அஷ்வினை “இவரும் உங்க மச்சான் தான்” என்று அறிமுகப்படுத்தினார்கள்.

பார்த்த முதல்நாளிலிருந்தே அஷ்வின் எனக்கு மிகவும் பிடித்துப்போனான்

நான் பார்த்து அவன் வளர்ந்தான் பள்ளிக்குபோக ஆரம்பித்தான். எனக்கு பெண் குழந்த பிறந்த பின் அவனை மாப்பிள்ளை என்று செல்லமாக கூப்பிட ஆரம்பித்தேன்.

”மாமா என்னை அப்படி கூப்பிடாதிங்க” நானும் அமுதாவும் (என் மகள்) நல்ல பிரண்ட்ஸ் மாதிரி இருக்கோம் அப்படியே இருப்போம் என்பான்..நானும் பதிலுக்கு “உனக்கு யார்டா என் பொண்ண கொடுக்க்போறாங்க.எது எப்படியிருந்தாலும் நீ எனக்கு மாப்பிள்ளை தாண்டா என்று கலாய்ப்பேன்.

அவன் வளர வளர நாங்கள் நல்ல நண்பர்களானோம்.பல சமயங்களில் அவன் எனக்கு ஆசானாகவும் இருந்தான்.

களையான சிரித்த முகம்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமை.சன் தொலைக்காட்சி பார்த்தே தமிழ் எழுத படிக்க கற்றுகொண்டான்.

எண் முப்பதை நான் சிலசமயங்களில் நுப்பது என்று உச்சரிக்கும்போதெல்லாம் உடனடியாக் திருத்துவான்,

எனக்கு தமிழ் கிறுக்கன் என்று பெயரும் வைத்தான்

.போன வாரம் ஞாயிற்று கிழமை இரவு அவனும் நானும் பிட்சா சாப்பிட்டோம்.அடுத்த வீக் எண்ட் பார்க்கலாம் மாமா  என்று கையசத்துவிட்டு சென்றான்.

மரணங்கள் எனக்கு புதிதல்ல.சின்ன வயதிலேயே தந்தையை இழந்தேன் திருமணமான சில மாதங்களின் என் தாயை இழந்தேன்.அதிகம் நேசித்த தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை இழந்தேன்.அப்போதெல்லாம் வந்த சோகத்தினை இந்த சோகம் மீளவே முடியாத சோகமாக இருக்கிறது.


யாரை நொந்துகொள்வது. :((

வேகமாக கவனமின்றி வண்டியோட்டிய பேருந்து ஓட்டுநரையா அல்லது 16 வயதில் வண்டி வாங்கி கொடுத்த பெற்றோர்களையா..

பெங்களுர் புனித பிலோமினாள் மருத்துவமனையில் பிறந்து ஸ்ரீரங்கபட்டனா காவிரி ஆற்றில் சாம்பலாய் கரைந்து போனான் அஷ்வின்.










Thursday, September 22, 2011

இப்ப டெக்னாலஜி ரொம்ப அட்வான்ஸ்ட்!!!

திங்கள் காலை பெங்களுரிலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.


திங்கள் காலை என்பதால் எதாவது முக்கிய அலுவலக மின்னஞ்சல்கள் வந்திருந்தால் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென்பதால் மடிக்கணியை திறந்த்து இணையத்தொடர்பினை கொடுத்தேன்.கொஞ்ச நேரத்தில்  அலுவலக வேலையை முடித்துவிட்டு அப்படியே டிவிட்டர்,பஸ்,பேஸ்புக் போன்ற தளங்களில் மூழ்கியிருந்தேன்.


யாரோ பார்ப்பது போல் எனக்கு ஒரு உணர்வு தோன்றியது.கணினியிலிருந்து பார்வையை நகர்த்தி திருப்பி பார்த்தேன்.பக்கலிருந்தவர் உடனடியாக மெல்லிய புன்னைகையுடன் ஒரு கேள்வி கேட்டார்..

”கொஞ்ச நேரம் உங்க லாப்டாப்பை கொடுங்கறிங்களா.?மெயில் செக் பண்ணிட்டு தந்துடரேன்” .

முன்பெல்லாம் பேருந்து பயணத்தில் அருகில் உட்கார்ந்திருப்பவர் நாம் வைத்திருக்கும் செய்திதாள் அல்லது வார இதழ்களை கேட்பார்கள்..




இப்ப டெக்னாலஜி அட்வான்ஸ்ட்

Sunday, September 18, 2011

இந்து+ஹிந்தி=இந்தியா

பெங்களுரில் எங்கள் வீடு அருகில் உள்ள உயர் மத்தியதர வகுப்பினர் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் விநாயகர் சிலை அமைத்து விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடினர்.

கொண்டாட்டத்தின் இறுதி நாளன்று,விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று அருகிலுள்ள ஏரியில் கரைக்க முடிவுசெய்தனர்.உயர் மத்திய வர்க்கமல்லவா நடந்தெல்லாம் ஊர்வலமாக செல்லமுடியாதே.அதனால் விட்டுக்கு ஒரு கார் பிள்ளையாரின் பின் ஊர்வலமாக அணிவகுத்து செல்ல முடிவெடுத்தனர்.

ஏறத்தாழ 30 கார்களில் ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு நடனமாடி பாட்டெல்லாம் பாட விருப்பமில்லை போலிருக்கு..வண்டியுனுள் அமர்ந்து செல்வதால் ஆடி பாட வாய்ப்பில்லை.பிள்ளையார் குறித்து பாடவும் தெரியவில்லை.தீடீரென முதல் வண்டியில் சென்றவர் பாரத் மாதாகீ ஜெ என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்.உடனே மற்றொருவர் வந்தே மாதரம் என்றார்.அடுத்தவர் மகாதமா காந்திக்கு ஜே என்றார்.தொடர்ந்து கோஷங்கள் தேசபக்தி குறித்து எழுப்பட்டன.

ஆவலுடன் நான் எதிர்பார்த்த அன்னா அசாரேக்கு ஜே என்ற கோஷம் எழுப்படவில்லை .

இந்து ஹிந்தியா=பாரதம் போலும்

Sunday, July 17, 2011

சென்னையில் நடந்த முதல் பதிவர் சந்திப்பு-பதிமுன்று வருடங்களுக்கு முன்பு

எனக்கு தெரிந்த வரையில் 98-வருடம் சென்னையில் முதன்முதலாய தமிழியிணைய முன்னோடி பாலா பிள்ளை அவர்கள நடத்திவந்த (tamil.net)தமிழியிணையம் என்ற மின்மடற் குழுவில் எழுதிவந்தவர்கள் சந்திப்பு ஒரு கார்த்திகை மாதம் நடைப்பெற்றது.அமெரிக்காவில் வசிந்து வந்த மணி மணிவண்ணன் அவர்கள் இந்தியா வந்த போது அவர்களை சந்திந்து பேசும் நிகழ்வாக அது அமைந்தது.சென்னை காந்திநகர் கிளப்பில் சந்திப்பு நடந்தது.மொத்தமாய் ஒரு 14 பேர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள்-

அரவிந்தன்

மணி மணிவண்ணன் (தற்போது இந்தியாவில் இருக்கிறார்.தமிழ்கணினியில் ஒரு முன்னோடி)

இராம்கி அய்யா (இன்றும் பல புதிய தமிழ்ச்சொற்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்)

நாக இளங்கோவன் (ஒருங்குறி விடயத்தில் தமிழ் எப்படி வஞ்சிக்கப்பட்டது என்று தொடர்ந்து அம்பலபடுத்திவருபவர்)

முகுந்த் (எ-கலப்பை என்ற மென்பொருளுக்கு சொந்தக்காரர்-பல தமிழ் மென்பொருள்களை உருவாக்கி வருபவர்)

சுரேஷ் சுப்பையன் (சென்னை கவிகள் என்ற தமிழ் மென்பொருள் நிறுவனத்தின் பங்குதாரர்)

சங்கர்-மென்பொருள் வல்லுனர்- சந்திப்பினை எற்பாடு செய்தவர்.

மனோஜ் (சென்னை கவிகள் நிறுவனத்தின் உரிமையாளர்.முதன் முதலாய் தமிழில் ஒரு தமிழ் சொற் செயலியை 96 வருடம் உருவாக்கியவர்)

மற்றும் சிலர். பெயர் நினைவுக்கு வரவில்லை

சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள்:-


மணி வண்ணன் தலையில் உருவான தகுதரம் என்ற பொதுவான எழுத்து தரத்தினை எல்லோரும் பயன்படுத்துவது.சென்னையில் உள்ள ஊடகங்களை பொதுவான தகுதரத்திற்கு மாற்ற முயற்சிப்பது எதிர்வரும் தமிழியிணைய மாநாட்டில் நம் பங்கு மற்றும் அபோதயை குழுமத்தில் இயங்கிவந்த அனானிகளின் அட்டகாசங்கள்.

நல்ல இரவு உணவுடன் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.அப்போது நான் சந்தித்த பலருடன் இன்று வரை நட்பு பாராட்டி வருகிறேன்.

Monday, June 27, 2011

தமிழீழ விடுதலைப்போரில் மாண்ட தமிழர்களுக்கு சென்னை மெரினாவில் நினைவஞ்சலி

முதன்முறையாக ஈழ் ஆதரவு நிகழ்வொன்றில் இத்துனை பெண்கள்.





பதிவர் நாரயண் மற்றும் நான்




சிறுவன் சட்டையில் புலித்தலைவரின் படம்






மணலில் அணைந்து போன மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்ச்சிக்கும் குழந்தைகள்


நண்பரின் தோளில் உடகார்ந்து புகைப்படம் எடுக்கும் பத்திரிக்கையாளர்



கூட்டத்தின் ஒரு பகுதி


இனம் புரியாத சோகத்துடன்...


நிகழ்வில் சந்தித்த பதிவர்கள்.

கே.ஆர்.பி செந்தில்,மருத்துவர் புரூணோ,மா.சிவகுமார்,இகாரஸ்பிரகாஷ்,மதன்கார்க்கி,வாய்ஸ் ஆப் விங்கஸ்,ஈரோடு செளந்தர்,வேடதாங்கல் கரு,வந்தேமாதரம்,பிலாசிபி பிரபாகரன்.பைத்தியகாரன்

Friday, April 01, 2011

ஒலங்காவும் – சச்சினும்”, ” முகமது அலியும் – முரளீதரனும் ” - ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்

ஒலங்காவும் – சச்சினும்”, ” முகமது அலியும் – முரளீதரனும் ” - ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்

சூடு, சொர‌ணை உள்ள‌ இந்திய‌ ம‌ட்டைப்ப‌ந்து இர‌சிக‌ர்க‌ள் மேற்கொண்டு இக்கட்டுரையை ப‌டிக்க‌ வேண்டாம் (please) ….

“நாங்கள் தொழில்ரீதியான மட்டைப்பந்து(Cricket) ஆட்டக்காரர்களாக இருந்தபோதிலும், எங்களது தேசத்தில் நடக்கும் கண்மூடித்தனமான மனித உரிமைமீறல்களை, படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு மனசாட்சியை மீறீ அமைதியாக இருக்க இயலாது. எங்களது மவுனம் , எங்களது தேசத்தில் நடப்பவைகளைப் பற்றிய அக்கறையின்மையாக வெளிப்படுமோ என்றெண்னி, இந்த சந்தர்ப்பத்தில் எங்களது அரசாங்கத்திற்கான எதிர்ப்பை, உலகக்கோப்பைப்போட்டிகளில் கருப்புப் பட்டையை அணிந்து பதிவு செய்கின்றோம்.

— ஹென்றி ஒலாங்கா (முன்னாள் சிம்பாவே ம‌ட்டைப்ப‌ந்து வீர‌ர்)



“என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” .”என்னுடைய சொந்த மக்களே இங்கு அடிமைகளாகவும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் கிடக்கும்பொழுது,, பத்தாயிரம் மைல்கள் கடந்து சென்று வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக்க நான் ஏன் பழுப்பு நிறமக்களை சீருடை அணிந்து கொல்லவேண்டும்”.வியட்நாம் போருக்கான ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட, ராணுவ உயரதிகாரிகளால் தன் பெயர் அழைக்கப்பட்டபொழுது நான்காவது முறையும் முன்னுக்கு வராமல் நின்றதால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

—– முக‌ம‌து அலி (உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர்)





ஈழத்தமிழர்களையும், காசுமீரிகளையும், இந்திய ஒன்றியத்தின் வடமேற்கு மாநில மக்களையும், பழங்குடிகளையும், தமிழக மீனவர்களையும் அன்றாடம் இந்த தேசங்கள் படுகொலை செய்து வருகின்றன‌, அந்த பகுதிகளில் மனித உரிமைகள் என்பது ஒரு சிறிய மாத்திரை அளவுக்கு கூட இல்லை என்பதும் உண்மை. இதை எல்லாம் கண்டனம் செய்யத்தவறியவர்கள் தான் இந்திய, இலங்கை மட்டைப்பந்து வீரர்கள்.

“அடிப்படை மனிதத்தன்மையே இல்லாத இவர்களை சிலர் தங்களது விருப்ப‌ தெய்வங்களாக பூசிப்பது சரியா?

அவர்கள் விளையாடும் விளையாட்டை பார்ப்பது முறையா? என்ற கேள்வியை உங்களின் ஆறாம் அறிவுக்கு விட்டுவிடுகின்றேன்…..

“ஓல‌ங்காவின், முகமது அலியின் மாந்த‌நேய‌த்தை வெறும் ப‌ண‌த்திற்காகவும், புகழிற்காகவும் விளையாடும் இந்திய‌, இல‌ங்கை வீர‌ர்க‌ளிட‌ம் எதிர்பார்ப்ப‌து கூட ஒரு ம‌ட‌த்த‌ன‌மே”

பின் குறிப்பு: ம‌ட்டைப்ப‌ந்து வ‌ர‌லாற்றில் ச‌ச்சினும், முரளீதரனும் எவ்வ‌ள‌வு தான் சாத‌னைக‌ளை செய்திருப்பினும் ஹென்றி ஒலாங்காவின் ம‌னித‌த் த‌ன்மைக்கு முன்னால், அவரது கால் தூசுக்கு கூட‌ ஒப்பிட‌ முடியாத‌வர்களே என்ப‌து என் தாழ்மையான‌ க‌ருத்து…



http://natramizhan.wordpress.com/2011/04/01/%e0%ae%92%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/

Saturday, February 12, 2011

தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

சில நாட்களுக்கு முன் எனக்கு மின்னஞ்சலில் வந்த கட்டுரை.

முழுக்கப் படியுங்கள்...- தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும்.

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு?


இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும்.

இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா?


இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திருப்பதை உலக மொழிகள் வேறு எவற்றிலும் காண முடியாது. அதே போலப் பிற்கால ஒலிகளாகிய ‘எப்’ (‘F’) போன்ற ஒலியைத் தமிழ் முதலிய செம்மொழிகளில் காண முடியாது. ஆகவே ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.

நம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாக எண்ணும் ஒருவர், இயல்பாகவே தம்முடைய மொழியையும் அதன் வழியே தம்முடைய இனத்தையும் தாழ்வாகக் கருதுபவராக அமைந்துவிடுவார். இப்படி உருவாகும் தாழ்வு மனப்பான்மை அவருடைய வளர்ச்சிக்கு இடையூறாக அமைந்துவிடும்.

அது சரி, அப்படியானால் உயர்வான மொழி என்று எதைக் கருதலாம்?


அவரவர்க்கு அவரவர் தாய்மொழியே உயர்வானது. நரிக்குறவர் இனத்திற்கு அவருடைய தாய்மொழியான வக்கிரபோலி உயர்வான மொழியே தவிர, தமிழோ ஆங்கிலமோ இல்லை. ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தங்கள் உலகத்தைப் பார்க்கிறார்கள்.

சான்று: நீங்கள் தமிழராகப் பிறந்து தமிழராக வாழ்வதால் தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாடு உங்களுடையது என்று உணர்கிறீர்கள் இல்லையா? தமிழ்நாட்டிலேயே பிறந்து வளரும் ஓர் ஆங்கிலேயரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் பண்பாட்டை அறிந்திருப்பாரேயன்றி அது தம்முடையது என்று உணரவோ அதைப் பின்பற்றவோ மாட்டார். அதே நேரம் வெளிநாட்டிலேயே பிறந்து வளரும் ஒரு தமிழர் இப்பண்பாட்டைத் தம்முடையது என்றும் அதன் படி வாழ வேண்டும் என்றும் எண்ணுவார்.

இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன சிக்கல்?

இன்னொரு மொழியில் பெயர் வைக்கும் போது பல நேரங்களில் அப்பெயர்களின் பொருளே தெரியாமல் வைத்து விடுவோம்.

அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க. சியாமளா என்பதன் பொருள் கறுப்பாயி என்பதாகும். கறுப்பாயி எனத் தமிழில் பெயர் வைக்கத் தயங்கும் ஒருவர் இன்னொரு மொழியில் ‘சியாமளா’ என்று பெயர் வைப்பதை விரும்புவது நகைப்புக்குரியது அல்லவா? ‘கனவு’ எனப் பெயர் வைக்கத் தயங்கும் நாம் ‘சுவப்னா’ என்று அதே பொருள் தரும் பெயரை வேறு மொழியில் வைப்பது அடிமை மனப்பான்மையே அன்றி வேறென்ன?

சில நேரங்களில் நம்முடைய குடும்பப் பெரியவர்களே அப்பெயர்களைச் சொல்லத் தடுமாறுவார்கள். நம்முடைய குழந்தைகளின் பெயரை நம் இல்லப் பெரியவர்களே சொல்லத் தடுமாறுவது நன்றாக இருக்குமா?

அதற்காக, ‘ஞான பிரகாசு’ என்னும் பெயரைத் தமிழாக்கி ‘அறிவு வெளிச்சம்’ என்று வைக்கச்சொல்கிறீர்களா?


நீங்கள் ‘ஞான பிரகாசு’ என்று இன்னொரு மொழியில் பெயர் வைப்பதற்குக் காரணமே அப்பெயர் ஒயிலாக இருப்பதாக எண்ணும் சிந்தனைதான்! ‘ஞான பிரகாசு’ என்று உங்களுக்கு ஒயிலாகத் தெரியும் இந்தப் பெயரை ஓர் அமெரிக்கரிடமோ செருமானியரிடமோ சொல்லிப் பாருங்கள். அவர்களுக்கு இந்தப் பெயர் பெருமைப்படும் பெயராகவோ ஒயிலாகவோ தெரியாதது மட்டுமில்லை, வாயில் கூட நுழையாது. உங்களுடைய அதே சிந்தனை ஏன் ஓர் அமெரிக்கருக்கோ செருமானியருக்கோ வரவில்லை? ஏனென்றால் நீங்கள் உங்களுடைய மொழியை விட, ‘ஞானப் பிரகாசு’ என்னும் பெயரைக் கொண்டுள்ள மொழியை உயர்வாகக் கருதும் மனப்பான்மையில் இருக்கிறீர்கள். இது தாழ்வு மனப்பான்மை தானே!

‘ஞான பிரகாசு’ என்னும் பெயரை ‘அறிவொளி’ என்று அழகு தமிழில் வைக்கலாம் அல்லவா.


அதற்காகக் கோப்பெருந்தேவி, பிசிராந்தையார், ஒளவையார் எனப் பழைய பெயர்களையா வைக்கச் சொல்கிறீர்கள்?

உங்களைத் தமிழில் பெயர் வைக்கச் சொன்னோமேயன்றிப் பழந்தமிழ்ப் பெயர்களைத் தாம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பழந்தமிழ்ப் பெயர்களை வைப்பது, புத்தாக்கச் சொற்களை வைப்பது, பெரிய பெயரை வைப்பது, சிறிய பெயராக வைப்பது என்பதெல்லாம் உங்களுடைய விருப்பத்தைச் சேர்ந்ததாகும்.

பழந்தமிழ்ப்பெயர்களை விடுங்கள். ‘புலிக்கட்டை’ என்று பெயர் வைப்பீர்களா? சிரிப்பு வருகிறது அல்லவா? அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரின் பெயர் தான் அது! அவருடைய பெயர் ‘Tiger Woods’. அதைத் தமிழில் சொன்னால் ‘புலிக்கட்டை’ தானே! பெயர் பழையது, புதியது என்பதெல்லாம் நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான்! எப்படிச் சிந்தித்தாலும் தாய்மொழியில் இருப்பது தான் முறையாகும்.

‘மோகன்’ என்று பெயர் வைக்கிறோம். அப்பெயரைத் தமிழில் ‘கவின்’ என்றோ ‘எழில்’ என்றோ வைக்கலாம் அல்லவா? ‘கண்ணன்’ எனப் பொருள் தரும் ‘கிருட்டினன்’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கண்ணன்’ என்றே வைக்கலாம் அல்லவா? ‘விசய்’ என்று பெயர் வைப்பதற்கு ‘வெற்றி’ என்று பெயர் வைக்கலாம் அல்லவா? ‘குமார்’ என்பதற்குக் ‘குமரன்’ என்று வைக்கலாம் அல்லவா? ‘உசா’ என்று பெயர் வைப்பதற்குக் ‘கதிர்’ என்று கூப்பிடலாம் அல்லவா!

சரி! என்னுடைய குழந்தைக்குத் தமிழில் பெயர் வைக்க ஆசைதான்! ஆனால் எங்கு தேடுவது?

ஏன் கவலைப்படுகிறீர்கள்? முனைவர் பா. வளன் அரசு(நெல்லை), முனைவர் மு. தெய்வநாயகம்(சென்னை), புலவர் இரா. இளங்குமரன்(திருச்சிராப்பள்ளி), முனைவர் தமிழண்ணல்(மதுரை), முனைவர் ந. அரணமுறுவல்(சென்னை) எனத் தமிழறிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை அணுகலாம். இன்னும் பல இயக்கங்கள் இருக்கின்றன. பல இணையத் தளங்கள் இருக்கின்றன. http://www.tamilkalanjiyam.com
http://www.peyar.in
http://wapedia.mobi/ta
http://thamizppeyarkal.blogspot.com,
http://tamilsaral.com/news%3Fid%3D3857.do
http://www.sillampum.com
http://pagalavan.in/archives/328

எனப் பல தமிழ்த்தளங்களில் நீங்கள் தமிழ்ப்பெயரைத் தேர்ந்துகொள்ளலாம்.

குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் தானே இதைச் சொல்கிறீர்கள்?

இல்லை. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது, வணிக நிறுவனங்களுக்குப் பெயர் வைப்பது, திரைப்படங்களுக்குப் பெயர் வைப்பது என எல்லாவற்றிற்கும் சேர்த்துத் தான் சொல்கிறோம்.

வணிக நிறுவனங்களுக்குமா?

ஆம். வெளி மாநிலத்திற்கு வந்து பிழைக்கும் தெலுங்கரான ‘உம்மிடி பங்காரு’ம் கன்னடரான ‘உடுப்பி’ உணவகத்துக்காரரும் தத்தம் மொழியிலேயே பெயர் வைக்கும்போது நாம் நம்முடைய மாநிலத்தில் இருந்துகொண்டே வணிக நிறுவனங்களுக்கு வேற்று மொழியில் பெயர் வைப்பது சரியா?

வேற்று மாநிலத்திலோ நாட்டிலோ இருக்கும்போது வணிக நிறுவனங்களுக்கு எப்படித் தமிழில் பெயர் வைப்பது?

ஒன்றும் கவலையில்லை. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே ‘உம்மிடி பங்காரு’ என்று தெலுங்கில் பெயர் வைத்துக் கடை நடத்தவில்லையா? ‘உடுப்பி’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் உணவகங்கள் இல்லையா? ‘அகர்வால்’ இனிப்பகங்கள் இல்லையா? ‘நாயர்’ கடைகள் இல்லையா?

திரைப்படங்களுக்குமா சொல்கிறீர்கள்? இது கருத்துரிமையில் தலையிடுவது ஆகாதா?

தமிழில் படம் எடுக்கிறார்கள். கதை தமிழர்கள் பற்றிய கதையாக இருக்கிறது. படத்தைத் தமிழகத்தில் தமிழர்களுக்குத் தான் வெளியிடுகிறார்கள். ஆக, எம்மொழியில் படம் இருக்கிறதோ, யாருக்காக எடுக்கப்படுகிறதோ அம்மொழியில் பெயர் வைப்பது தானே பொருத்தமாக இருக்கும். நாம் ஒன்றும் சப்பான் நாட்டிற்குச் சென்று தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்கவில்லை.

தமிழில் பெயரை வைப்பதால் நட்டம் ஏற்படும் சூழல் வரும்போது என்ன செய்வது?

அப்படிப்பட்ட சூழல் இதுவரை வந்ததேயில்லை. எத்தனையோ ஆங்கிலப் படங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். அப்படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கிறார்கள். ‘300’ என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது. அப்படத்திற்கு ‘300 பருத்தி வீரர்கள்’ என்று பெயர் வைத்தார்கள். பெயர் தமிழில் இருந்ததால் அப்படம் ஓடவில்லையா என்ன?

அப்படியானால் தமிழில் பெயர் வைக்க வேண்டுமா? தாய்மொழியில் பெயர் வைக்க வேண்டுமா?

அவரவர் தத்தம் தாய்மொழியிலேயே பெயர் வைக்க வேண்டும். நாம் தமிழர் அல்லவா! எனவே தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும்.

தமிழில் பெயரிடுவோம்.