Monday, September 26, 2011

புனித பிலோமினாள் மருத்துவமனையில் பிறந்து ஸ்ரீரங்கபட்டனா காவிரி ஆற்றில் சாம்பலாய் கரைந்து போனான் அஷ்வின்

பெங்களுர் புனித பிலோமினாள் மருத்துவமனையில் பிறந்து ஸ்ரீரங்கபட்டனா காவிரி ஆற்றில் சாம்பலாய் கரைந்து போனான் அஷ்வின்.




என் மனைவியின் தம்பியும் என் சின்ன மாமனாரின் மகனுமாகிய அஷ்வின் என்ற 16 வயது சிறுவன் சென்ற வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்துவிட்டு உடன் படிக்கும் மாணவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள உடன் படிக்கும் மாணவன் கௌரவ் உடன், கெளரவ் வண்டியோட்ட (ஹோண்டா டியோ) பின்னால் அமர்ந்து சென்றான் அஷ்வின்.

கோரமங்களா 80 அடிச்சாலையில் (கடவுச்சீட்டு அலுவலகம் எதிரில்) முன்னால் சென்ற வண்டியொன்றை முந்தி செல்ல முயன்ற போது வேகமாக பின்னால் வந்து அரசு பேருந்து இவர்கள் சென்ற வண்டியை இடித்துதள்ளியது..அஷ்வின் பின் தலையில் பேருந்து பலமாக மோதியது.பலமாக அடிப்பட்ட அஷ்வின் கிழே சாலையில் விழுந்தான் வண்டியோட்டிய கெளரவ் மீதும் பேருந்தின் இருச்சக்கரமும் ஏறியது.கெள்ரவ் போட்டிருந்த தலைக்கவசமும் நசுங்கியது.




சம்பவம் நடந்த இடத்திலேயே இரு சிறார்களும் மரணமடைந்தனர்.அஷ்வின் அலைப்பேசி மூலம் அவன் தந்தைக்கு சம்பவம் நடந்த இடத்திலிருந்த பொது மக்கள் தகவல் கொடுத்தனர்.

உரிய மருத்துவ பரிசோதனைக்களுக்குப்பிறது அஷ்வின் உடல் வெள்ளியிரவு 11:15 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.



சனிக்கிழமை மதியம் பசவன்குடி மயானத்தில் மின்சாரம் மூலம் அஷ்வின் உடல் எரியூட்டப்பட்டது.

அவன் படிக்கும் பள்ளியிலிருந்து பெரும்பாலன மாணவ மாணவிகள் ஒற்றை ரோசாப்பூவுடன் அஞ்சலி செலுத்தினர்.


அஷ்வினுக்கும் எனக்குமான உறவு:-

96 வருடம் என் மனைவியை பெண் பார்க்கச்சென்றபோது ஒரு வயது குழ்ந்தையாக இருந்த அஷ்வினை “இவரும் உங்க மச்சான் தான்” என்று அறிமுகப்படுத்தினார்கள்.

பார்த்த முதல்நாளிலிருந்தே அஷ்வின் எனக்கு மிகவும் பிடித்துப்போனான்

நான் பார்த்து அவன் வளர்ந்தான் பள்ளிக்குபோக ஆரம்பித்தான். எனக்கு பெண் குழந்த பிறந்த பின் அவனை மாப்பிள்ளை என்று செல்லமாக கூப்பிட ஆரம்பித்தேன்.

”மாமா என்னை அப்படி கூப்பிடாதிங்க” நானும் அமுதாவும் (என் மகள்) நல்ல பிரண்ட்ஸ் மாதிரி இருக்கோம் அப்படியே இருப்போம் என்பான்..நானும் பதிலுக்கு “உனக்கு யார்டா என் பொண்ண கொடுக்க்போறாங்க.எது எப்படியிருந்தாலும் நீ எனக்கு மாப்பிள்ளை தாண்டா என்று கலாய்ப்பேன்.

அவன் வளர வளர நாங்கள் நல்ல நண்பர்களானோம்.பல சமயங்களில் அவன் எனக்கு ஆசானாகவும் இருந்தான்.

களையான சிரித்த முகம்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமை.சன் தொலைக்காட்சி பார்த்தே தமிழ் எழுத படிக்க கற்றுகொண்டான்.

எண் முப்பதை நான் சிலசமயங்களில் நுப்பது என்று உச்சரிக்கும்போதெல்லாம் உடனடியாக் திருத்துவான்,

எனக்கு தமிழ் கிறுக்கன் என்று பெயரும் வைத்தான்

.போன வாரம் ஞாயிற்று கிழமை இரவு அவனும் நானும் பிட்சா சாப்பிட்டோம்.அடுத்த வீக் எண்ட் பார்க்கலாம் மாமா  என்று கையசத்துவிட்டு சென்றான்.

மரணங்கள் எனக்கு புதிதல்ல.சின்ன வயதிலேயே தந்தையை இழந்தேன் திருமணமான சில மாதங்களின் என் தாயை இழந்தேன்.அதிகம் நேசித்த தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை இழந்தேன்.அப்போதெல்லாம் வந்த சோகத்தினை இந்த சோகம் மீளவே முடியாத சோகமாக இருக்கிறது.


யாரை நொந்துகொள்வது. :((

வேகமாக கவனமின்றி வண்டியோட்டிய பேருந்து ஓட்டுநரையா அல்லது 16 வயதில் வண்டி வாங்கி கொடுத்த பெற்றோர்களையா..

பெங்களுர் புனித பிலோமினாள் மருத்துவமனையில் பிறந்து ஸ்ரீரங்கபட்டனா காவிரி ஆற்றில் சாம்பலாய் கரைந்து போனான் அஷ்வின்.










Thursday, September 22, 2011

இப்ப டெக்னாலஜி ரொம்ப அட்வான்ஸ்ட்!!!

திங்கள் காலை பெங்களுரிலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.


திங்கள் காலை என்பதால் எதாவது முக்கிய அலுவலக மின்னஞ்சல்கள் வந்திருந்தால் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென்பதால் மடிக்கணியை திறந்த்து இணையத்தொடர்பினை கொடுத்தேன்.கொஞ்ச நேரத்தில்  அலுவலக வேலையை முடித்துவிட்டு அப்படியே டிவிட்டர்,பஸ்,பேஸ்புக் போன்ற தளங்களில் மூழ்கியிருந்தேன்.


யாரோ பார்ப்பது போல் எனக்கு ஒரு உணர்வு தோன்றியது.கணினியிலிருந்து பார்வையை நகர்த்தி திருப்பி பார்த்தேன்.பக்கலிருந்தவர் உடனடியாக மெல்லிய புன்னைகையுடன் ஒரு கேள்வி கேட்டார்..

”கொஞ்ச நேரம் உங்க லாப்டாப்பை கொடுங்கறிங்களா.?மெயில் செக் பண்ணிட்டு தந்துடரேன்” .

முன்பெல்லாம் பேருந்து பயணத்தில் அருகில் உட்கார்ந்திருப்பவர் நாம் வைத்திருக்கும் செய்திதாள் அல்லது வார இதழ்களை கேட்பார்கள்..




இப்ப டெக்னாலஜி அட்வான்ஸ்ட்

Sunday, September 18, 2011

இந்து+ஹிந்தி=இந்தியா

பெங்களுரில் எங்கள் வீடு அருகில் உள்ள உயர் மத்தியதர வகுப்பினர் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் விநாயகர் சிலை அமைத்து விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடினர்.

கொண்டாட்டத்தின் இறுதி நாளன்று,விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று அருகிலுள்ள ஏரியில் கரைக்க முடிவுசெய்தனர்.உயர் மத்திய வர்க்கமல்லவா நடந்தெல்லாம் ஊர்வலமாக செல்லமுடியாதே.அதனால் விட்டுக்கு ஒரு கார் பிள்ளையாரின் பின் ஊர்வலமாக அணிவகுத்து செல்ல முடிவெடுத்தனர்.

ஏறத்தாழ 30 கார்களில் ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு நடனமாடி பாட்டெல்லாம் பாட விருப்பமில்லை போலிருக்கு..வண்டியுனுள் அமர்ந்து செல்வதால் ஆடி பாட வாய்ப்பில்லை.பிள்ளையார் குறித்து பாடவும் தெரியவில்லை.தீடீரென முதல் வண்டியில் சென்றவர் பாரத் மாதாகீ ஜெ என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார்.உடனே மற்றொருவர் வந்தே மாதரம் என்றார்.அடுத்தவர் மகாதமா காந்திக்கு ஜே என்றார்.தொடர்ந்து கோஷங்கள் தேசபக்தி குறித்து எழுப்பட்டன.

ஆவலுடன் நான் எதிர்பார்த்த அன்னா அசாரேக்கு ஜே என்ற கோஷம் எழுப்படவில்லை .

இந்து ஹிந்தியா=பாரதம் போலும்