Tuesday, January 27, 2009

கிளிநொச்சியில் தமிழாசிரியர் பணி

காதைப் பிளக்கும் குண்டு ஓசைகளுக்கு நடுவில் ஈழத்தில் துணிச்சலாகத் தங்கியிருந்து, பிரபாகரனின் மனைவி மதிவதனி உள்பட பலருக்கு சிறப்புத்தமிழ் கற்றுத் தந்து திரும்பியிருக்கிறார் நெல்லைப் பேராசிரியர் ஒருவர். அங்கே தங்கியிருந்த காலகட்டத்தில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் அவர் இரண்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரது அந்த அனுபவங்களைக் கேட்டு அசந்து போனோம் நாம்.

அந்த `தில்'லான பேராசிரியரின் பெயர் மு.செ.குமாரசாமி. தற்போது 70 வயது. நெல்லை மாவட்டம் ராயகிரியைப் பிறப்பிடமாய்க் கொண்ட வித்வான் அருணாசலம் பிள்ளை இவருக்கு பெரியப்பா முறை. முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், பழ.நெடுமாறன், வீரமணி போன்றவர்கள் எல்லாம் அருணாசலம் பிள்ளையின் மாணவர்கள்தான். அருணாசலம் பிள்ளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதால், குமாரசாமியும் அங்கேயே தனது படிப்பை முடித்திருக்கிறார். அதன்பின் திராவிட இயக்கங்களின்பால் ஈர்க்கப்பட்டு குமாரசாமி என்ற தனது பெயரை `அறிவரசு' என மாற்றிக் கொண்டிருக்கிறார்.

கல்லூரிப் படிப்பு முடிந்து ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த அறிவரசு, பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்தில் தங்கி வாழ ஆரம்பித்திருக்கிறார். பழ.நெடுமாறனுடன் இவருக்கு நெருக்கம் அதிகம் என்பதால், 1983-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அலை தீவிரமாக வீசியபோது நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோருடன் பேராசிரியர் அறிவரசு பல்வேறு இடங்களுக்குச் சென்று புலிகளுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருக்கிறார். இதனால் புலிகளின் கவனம் இவர்மேல் திரும்ப, அதன்பின் நடந்ததுதான் அவரது ஈழப்பயணம்.


அதுபற்றி மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள நாம் கடையம் சென்று பேராசிரியர் அறிவரசுவை அவரது வீட்டில் சந்தித்தோம். மிகவும் எச்சரிக்கையுடன் நம்மிடம் உரையாடினார் அவர்.

``1994-ம் ஆண்டு நான் ஓய்வு பெற்ற பிறகு, விடுதலை மற்றும் தென்செய்தி போன்ற இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். எனது எழுத்தைப் படித்துப் பார்த்த கொழும்பு நண்பர் ஒருவர் (பெயர் வேண்டாம்) என்னைச் சந்தித்து, `உங்களுக்கு இலங்கையில் ஒரு வேலை இருக்கிறது. வர முடியுமா?' என்று கேட்டார். நான் சம்மதித்தேன். கடந்த 2006 மார்ச் மாதம்பக்கா பாஸ்போர்ட், விசாவுடன் கொழும்புக்கு விமானமேறினேன். அங்கு போன பின்னர்தான் அந்த நண்பர், `கிளிநொச்சியில் தமிழாசிரியர் பணி' என்றார். அப்போது ஈழத்தில் சண்டை எதுவுமின்றி அமைதி நிலவிய நேரம். எனவே நானும் ஒப்புக் கொண்டேன்.
புலிகளின் அரசியல் தலைநகராக இருந்த கிளிநொச்சிக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்குள்ள நிதி மேலாண்மை கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அந்தக் கல்லூரியைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். உடைந்த ஓட்டுக் கூரை மற்றும் மணல் தரையுடன் ஏதோ 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடம் போல இருந்தது அது.

அங்கே நாற்பது மாணவ, மாணவியர் நிதி மேலாண்மையும், முப்பது பேர் தமிழும் படித்து வந்தார்கள். கல்லூரிப் பொறுப்பாளர் (அவரும் புலிதான்) என்னிடம், `அய்யா....இங்கு அட்வான்ஸ் லெவல் (ப்ளஸ் டூ) முடித்த முப்பது பேரையும் தமிழில் வல்லுனர்களாக்கி தமிழ் ஆசிரியர்களாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு' என்றார். `இங்கு பேராசிரியர்கள் வேறு யாருமில்லையா?' என்று கேட்டபோது, `யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களை வரவழைப்பது சிரமம்' என்றார்.


இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஈழத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளும் சிங்கள அரசால் நடத்தப்படுபவைதான். ஆனால், தமிழாசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டால் புது ஆசிரியர்களை சிங்கள அரசு நியமிப்பதில்லை. எனவே, எந்தப் பள்ளியிலும் தமிழாசிரியர்கள் கிடையாது. மொழியை அழித்தால் இனத்தை அழித்து விடலாம் என்பதற்காக சிங்கள அரசு செய்யும் கபடவேலை அது. அதைப் புரிந்து கொண்ட புலிகள், தமிழைக் காப்பாற்றுவதில் உறுதியாயிருக்கிறார்கள். அதற்காக `தனித் தமிழ் இயக்கம்' ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே என்னைத் தமிழ் கற்பிக்க அவர்கள் அழைத்திருந்தார்கள்.


மாணவர்கள் முப்பது பேருக்கான பாடத்திட்டத்தை நீங்களே வடிவமைத்துக் கொள்ளுங்கள்' என்று பொறுப்பாளர் கூறிவிட்டதால் நானும் இரண்டு ஆண்டுகளுக்கான சிலபஸை வகுத்து பாடங்களை நடத்தத் தொடங்கினேன். அப்போது போர் நிறுத்தம் அமலில் இருந்ததால், முதலாண்டு எந்தப் பிரச்னையுமில்லாமல் போனது. நான் தமிழ் சொல்லிக்கொடுத்த விதம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் ஊர்மக்களும் கூட சிறுசிறு குழுக்களாய்ப் பிரிந்து என்னிடம் பிழையின்றி தமிழ் எழுத கற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள். நான் ஈழம் போய்ச் சேர்ந்த மூன்றாவது மாதத்தில் ஒருநாள் தலைவரைப் (பிரபாகரனை) பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அப்போது அவரிடம் விரிவாய் பேச முடியவில்லை.


நான் தலைவரைப் பார்த்து விட்டு வந்த சில நாட்களிலேயே கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலைப் பொறுப்பாளர் செல்வி என்னைச் சந்தித்து `நாளை முதல் ஒரு முக்கிய பிரமுகர் உங்களிடம் தமிழ் கற்க வருகிறார்!' என்று சொன்னார். மறுநாள் நான் செஞ்சோலைக்குப் போனேன். அங்கே பதினைந்து பேர் கொண்ட மகளிர் குழு ஒன்று எனக்காக காத்துக் கொண்டிருந்தது. அந்தப் பதினைந்து பேரில் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் ஒருவர். பெண்களோடு பெண்களாய் சாதாரணமாய் அமர்ந்திருந்த மதிவதனி, யாழ் பல்கலைக் கழகத்தில் படித்தவர்தான். ஆனால், தமிழைப் பிழையின்றி எழுத வேண்டுமென்பதற்காகவே என்னிடம் பாடம் படிக்க வந்திருந்தார். நான் பாடம் நடத்தும்போது மதிவதனி மிகக் கவனமாகப் பாடம் கேட்பார். இலக்கியத்திலிருந்து எதையாவது எழுதச் சொன்னால் வேகவேகமாய் எழுதி முதல் ஆளாய் என்னிடம் காட்ட வருவார். ஒரு சின்னக் குழந்தையின் ஆர்வம் அவரிடம் இருந்தது. மூன்று மாத காலம் அவர் என்னிடம் படித்தார்'' என்ற பேராசிரியர் அறிவரசு, சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார்.


``2007 ஜூலை மாதத்திற்குப் பின், ஈழத்தில் நிலைமை மாறத் தொடங்கியது. ராஜபக்ஷே அதிபரானதும் தன்னிச்சையாய் போர் நிறுத்தத்தை வாபஸ் பெற்றார். அதன்பின் இலங்கை விமானங்களின் குண்டுவீச்சுகள் தொடங்கின. பள்ளியில் நான் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும்போது திடீரென, `அய்யா....வண்டு சுத்துது!' (ஆளில்லா வேவு விமானம்) என்று மாணவ, மாணவிகள் கத்துவார்கள். அந்த வேவு விமானம் வந்துபோன பத்து நிமிட நேரத்தில் போர் விமானங்கள் வந்து குண்டு வீசும். அவ்வளவுதான். அனைவரும் பதுங்கு குழிக்குள் ஓடி பதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். இதற்காகவே பள்ளிகளில் பதுங்கு குழிகள் வெட்டி வைத்திருக்கிறார்கள். சில நேரம் பள்ளிகளும் குண்டு வீச்சுக்கு இரையாகும். இதனால் தமிழர்கள் புலம்பெயர்வது போல் பள்ளிகளும் புலம் பெயரும் அவலம் அங்கே தொடங்கியது.


நான் பணியாற்றிய கல்லூரி வளாகத்தில் திடீரென ஓர் ஓரமாய் 1500 பேர் இருந்து படிப்பார்கள். கேட்டால் `பக்கத்து ஊர்ப் பள்ளியில் குண்டு போட்டு விட்டார்கள். அதனால்தான் பள்ளி இடம் பெயர்ந்துள்ளது' என்பார்கள். எனக்குக் கண்ணீர் வரும். என் தமிழ்ச்சாதிக்கு நிம்மதியான கல்வி கூட கிடைக்கவில்லையே என்று ஆத்திரம் ஆத்திரமாய் வரும். ஒருமுறை விமானக் குண்டுவீச்சில் மதிவதனியின் தோழியான செல்வி பலியானது எனது நெஞ்சைப் பதற வைத்த சம்பவம். நான் ஈழத்திலிருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் குண்டு வீசி கொல்லப்பட்டார்.


27.11.07-ம் தேதி மாவீரர் வாரம் தொடங்கியது. மக்கள் அனைவரும் சாரைசாரையாக மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். பிரபாகரன் மாவீரர் நாள் உரையாற்றினார். அவர் வானொலி நிலையத்திலிருந்துதான் உரையாற்றுகிறார் என்று எண்ணிய சிங்கள விமானப்படை, வானொலி நிலையத்தின்மீது குண்டு வீசியது. அதில் நிலைய பொறுப்பாளர் இசைவெளி செம்பியன் பலியானார். வானொலி நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.


அங்கே போர் தீவிரம் அடைந்தநிலையில் புலிகள் என்னிடம், `அண்ணா இங்கு நிலைமை சரியில்லை. உங்கள் உயிர் முக்கியம். நீங்கள் தமிழகம் செல்லுங்கள். தமிழ் ஈழம் கிடைக்கும் போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம்' என்று சொல்லி என்னை அனுப்ப ஆயத்தமானார்கள். நான் மறுபடியும் தலைவரைப் பார்க்க வேண்டுமென்று சொன்னேன். `சரி' என்ற பொறுப்பாளர், கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் திடீரென என்னை தலைவரிடம் அழைத்துச் சென்றார். பலத்த சோதனைக்குப் பின்னர் ஓர் அறையினுள் நான் அனுமதிக்கப்பட்டேன்.

என்ன ஆச்சரியம்? தலைவர் கூப்பிய கரங்களுடன் வாசல் வரை வந்து, எனக்கு வணக்கம் சொல்லி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். ஏறத்தாழ ஒரு மணி நேரம், அவருடன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. `நீங்கள் ஈழம் வந்து எவ்வளவு நாளாகிறது?' என்று கேட்டார். `இரண்டு ஆண்டுகள்' என்றதும் அவரே ஆச்சரியப்பட்டுப் போனார். நான் தமிழ்ப்பேராசிரியர் என்பதால் போர் பற்றி எதுவும் பேசாமல் தமிழ் வளர்ச்சி பற்றி மட்டுமே பேசினார். சுதந்திர ஈழத்தில் தமிழ் வளர்க்கவும், காக்கவும் பல்வேறு திட்டங்களை வைத்திருப்பதாய்ச் சொன்னார். `தமிழ் ஈழம் எப்போது மலரும்?' என்று நான் கேட்டதற்கு, `அது உலகச் சூழலைப் பொறுத்தது!' என்று மட்டும் ஒரே வரியில் பதிலளித்தார்.


இந்தத் தலைவன் இருக்கும் காலத்திலேயே தனி ஈழம் மலர்ந்தால்தான் உண்டு என்கிற எண்ணமே அவரைச் சந்தித்து விட்டு வரும்போது எனக்கு ஏற்பட்டது. இப்போது கிளிநொச்சி வீழ்ந்ததைக் கேட்டு என் உள்ளம் துடித்துப் போனது. என்னிடம் படித்த மாணவியர் பலர் ஆசிரியைகளாய் நியமிக்கப்பட்ட செய்தியை எனக்குக் கடிதம் மூலம் அவர்கள் தெரியப்படுத்தியிருக்கிறார்��
�ள். (கடிதங்களைக் காட்டுகிறார்) இப்போது அவர்களெல்லாரும் உயிரோடு இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. மூன்று லட்சம் மக்களோடு முப்பதாயிரம் மாணவ, மாணவியரும் காட்டுக்குள் போய் விட்டார்கள். இதன் மூலம் ஒரு படிப்பறிவற்ற சமுதாயம் உருவாகும் அவலம் இருக்கிறது. அதுதான் சிங்கள ஆட்சியாளர்களின் எண்ணமாய் இருக்கலாம். மொத்தத்தில் தமிழினம் அழிகிறது. அதை தாய்த் தமிழன் வேடிக்கை பார்க்கிறான். சரித்திரம் நம்மை மன்னிக்காது'' என்றபோது, பேராசிரியர் அறிவரசுவின் கண்களில் கண்ணீர்.
பேராசிரியர் அறிவரசு கிளிநொச்சியில் இரண்டு ஆண்டு காலம் தங்கியிருந்த போது சம்பளம் எதுவும் வாங்கவில்லையாம். ``தங்குமிடம், சாப்பாடு, போக்குவரத்து என மற்ற வசதிகள் அனைத்தையும் அவர்கள் செய்து தந்திருந்தார்கள். மற்றபடி நானும் சம்பளம் கேட்கவில்லை. அவர்களும் சம்பளம் தரவில்லை'' என்ற அறிவரசு, ``எனது தமிழ்ச் சேவையைப் பாராட்டி `கேடில் விழுச்செல்வம் கல்வி' என்ற குறள் பதித்த நினைவுப்பரிசை பிரபாகரன் எனக்குக் கொடுத்தார். ஆனால் அதைக் கொண்டு சென்றால் கொழும்பு விமான நிலையத்தில் பிரச்னை வரும் என்ற புலிகள், `காலாகாலத்தில் அது கண்டிப்பாக உங்களை வந்து சேரும்' என்று கூறினர்'' என முடித்தார். அப்போது அவரது முகத்தில் பெருமை பூத்திருந்தது.தமிழ் காக்கும் புலிகள்!

ஈழத்தில் 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2008-ம் ஆண்டு மார்ச் வரையிலான இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்த பேராசிரியர் அறிவரசு, அங்கே புலிகள் தமிழ் வளர்க்கும் விதம் பற்றி சில வித்தியாசமான தகவல்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
``புலிகள் தயாரித்து வைத்திருக்கும் ஒரு கையேட்டில் சுமார் பத்தாயிரம் சுத்த தமிழ்ப் பெயர்கள் இருக்கும். அந்தக் கையேடு, எல்லா மகப்பேறு மருத்துவமனைகளிலும் வைக்கப்பட்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்கள் அந்தக் கையேட்டில் தங்களுக்குப் பிடித்தமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்குச் சூட்டி பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த பிறப்புச் சான்றிதழை அப்படியே `தமிழீழ வைப்பகத்தில்' (வங்கியில்) கொண்டு போய்க் காட்டினால் அக்குழந்தையின் பெயரில் ஆயிரம் ரூபாய் வைப்பு (முதலீடு) செய்யப்படுகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பதினெட்டு வயதானதும் வட்டியோடு அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்குத் `தமிழ் அமுதம் திட்டம்' என்று பெயர். தவிர, இளைஞன் ஒருவன் போராளிகள் இயக்கத்தில் சேரும்போது அவனது பெயர் மாற்றப்படுகிறது. உதாரணத்திற்கு ரவியை அன்புச்செல்வன் என்றும், ஆலானை தமிழன்பன் என்றும் மாற்றியிருக்கிறார்கள். போராளிக்கு சாதி, மதமிருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
ஈழத்தில் வணிக நிறுவனங்களுக்கு தமிழ்ப் பெயர் இருந்தால் மட்டும்தான் அனுமதி கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் போல அங்கே ஷுவல்லர்ஸ், சலூன் எல்லாம் கிடையாது. `நகையகம்', `அழககம்'தான். உலகில் அழிந்து வரும் மொழிகளில் தமிழும் ஒன்று என்று யுனெஸ்கோ ஆய்வு தெரிவிக்கிறது. யுனெஸ்கோவினர் ஈழத்தைப் போய்ப் பார்த்தால்அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழ் அழிந்தாலும் ஈழத்தில் தமிழ் வாழும் என்று ஒரே குரலில் சொல்கிறார்கள் ஈழத்தமிழர்கள்'' என்றார் அறிவரசு

நன்றி: ஓர்க்குட்

No comments: